Monday 10 February 2014

மெலூஹாவின் அமரர்கள்



THE IMMORTALS OF MELUHA ஆங்கிலத்தில் தான் வாசித்தேன்.ஆனால் தமிழில் இந்த புத்தகம் வந்திருப்பது ஆங்கிலத்தில் நூறு பக்கங்களுக்கு மேல் படித்த பின்னரே தெரிய வந்தது. 
இந்திய எழுத்தாளர்களின் ஆங்கில நாவல்கள் அவ்வளவாக என்னை ஈர்க்காத காரணத்தால் ஒரு சிறு தயக்கத்துடனே ஆரம்பித்தேன்.ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் பெரும்பாலும் வட இந்தியர்களாகவே இருக்கும் பட்சத்தில் எனக்கு கதா பாத்திரங்களின் ஆங்கில உரையாடல்கள் வடஇந்திய அக்சென்ட்டுடனே வாசிக்க முடிந்தது சற்று கவலையாகவே இருந்தது. 
ஆனால் முதல் இரண்டு பக்கங்களிலேயே மெலூஹா நம்மை உள்ளிழுத்து கொள்கிறது. 

சிவபெருமான் என்ற கடவுளை பூமியில் ரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஷிவா என்ற ஒரு சாதாரண மனிதனாகவும் பார்வதி, தச்சன் என்று சிவபுராண கதாபத்திரங்களை பண்டைய சிந்து சமவெளி நாகரீகத்திலும்  ராம ஜென்ம பூமி அயோத்தியிலும் நேர்த்தியாக பின்னப்பட்ட கற்பனைக்  கதையில் உலவ விட்டிருக்கிறார் கதாசிரியர். 

இமய மலையின் அடிவாரத்தில் வசிக்கும் குணா என்ற பழங்குடி இனத்தின் தலைவன் ஷிவா, அங்கு மற்ற இனத்தோடு அடிக்கடி ஏற்படும் சண்டைக் காரணமாக தனது பரிவாரங்களுடன் மெலூஹாவுக்கு அகதியாக புறப்படுகிறார். மெலூஹாவுக்குள்    அனுமதிக்கப்படும் முன்னர் குணா இனத்தவர் அனைவருக்கும் உள்ள நோய்கள் கண்டறியப்பட்டு, மருத்துவம் பார்க்கப்படுகிறது.அப்போது அனைவருக்கும் சோம ரஸம் என்னும் பானம் மருந்து என்ற பெயரில் அளிக்கபடுகிறது. அதைப் பருகியவுடன் ஷிவாவிற்கு கழுத்து நீலமாக மாறிப் போக அவரை நீலகண்டர் என பாவித்து மெலூஹாவின் தலைநகரான தேவகிரியில் உள்ள  சக்ரவர்த்தி தச்சனிடம் அழைத்துச் செல்கின்றனர். தாங்கள் இவ்வளவு  காலம் காத்திருந்தது இந்த நீலகண்டருக்காகத் தான் என அவரை கடவுளாகவே தொழுகின்றனர் மெலூஹாவினர்.  சூரியவம்சத்தை சேர்ந்த மெலூஹாவினர் சந்திரவம்சம் மற்றும் நாகா எனப்படுபவர்களின் 
 தாக்குதல்களிடமிருந்து  தங்களை காக்க வந்த கடவுளாகவே ஷிவாவை கொண்டாடுகின்றனர். ஷிவா உண்மையாகவே கடவுள் தானா,  சூரியவம்சத்தை காப்பாற்றினாரா இல்லையா சந்திரவம்சத்தினர் உண்மையில் செய்த மோசடி என்ன என்பதே மீதி கதை. 

ஷிவா என்ற கதாபாத்திரத்தை அனைவரும் வணங்கும் சிவபெருமானுக்கான நடனம், மரிஜுஅனா புகைத்தல்,தீயவற்றை அழிக்கும் ஆற்றல்....போன்ற குணங்களோடு கூட குற்ற உணர்ச்சி முதற்கொண்டு காமம், கோபம், காதல் என்று ஒரு சாதாரண மனிதனை போல உலவ விட்டிருப்பதில் வெளிப்படுகிறது அமிஷ் திரிபாதியின் அசத்தலான  கதைசொல்லும் திறமை.ஷிவாவை நீலகண்டராக ஊரே வணங்கும் போதும் அந்த போதை சற்றும் தலைக்கு ஏறாமல், நீல கழுத்தை கொண்டதாலேயே தான் கடவுளாகிவிட முடியாது என்று தன்னடக்கத்தோடு ஷிவா அமைதி காப்பதும், பல இடங்களில் பாராட்டை ஏற்றுக் கொள்ள முடியாமல் நெளிவதும், சாமர்த்தியமாக போரில் வியூகம் அமைப்பதும், போர் முடிந்து குற்ற உணர்ச்சியில் யாரிடமும் பேசக்கூட முடியாமல் ராமர் பிறந்த இடத்திற்கு சென்று கண்ணீர்விட்டு அழுவதும்... ஷிவாவின் கதாபாத்திரம் படிப்படியாக உயர்ந்து நம் மனதில் இடம் பிடிக்கிறது. 

சிந்து சமவெளி நாகரிகம், ராமபிரான் வரலாறு, அயோத்தியா, ஆன்மீகம்,நட்பு, காதல், துரோகம் பழிவாங்கல் ... என பல தளங்களில் சிரமமில்லாமல் பயணிக்கிறது கதை. பண்டைய சிந்துசமவெளி நாகரிகத்தின் உள் கட்டமைப்பு வசதிகளையும் அவர்களின் வாழ்கை முறையையும் வெகு அழகாக விவரிக்கிறார் கதாசிரியர்.அதுவே ஒரு சில இடங்களில் 'ஓவர் டோஸ்' போல் ஆகிவிடுகிறது. கதையை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் ஷிவாவை ஊர் ஊராக அலைய விட்டிருப்பது போல் ஒரு உணர்வு... நடுவில் வரும் இந்த தொய்வான நூறு பக்ககங்களை கடந்து விட்டால் கடைசி நூற்றி  ஐம்பது பக்கங்களும் செம விறுவிறுப்பு. ஷிவா சதியை (பார்வதியை) முதன் முதலில் பார்ப்பது,அவள்  பின்னாலேயே நம் வழக்கமான ஹீரோக்கள் போல தன்னை மறந்து போவது, பிக் அப் செய்வது, காதலில் உருகுவது, கல்யாணம் முடிப்பது  என இந்த காட்சிகள் அனைத்திலும் ஒரு வித சினிமாத்தனம் விரவிக்கிடக்கிறது. நமக்கு பிடித்த ஹிந்தி ஹீரோவை கற்பனை செய்து கொண்டு படித்தால் (ஹ்ரிதிக் ரோஷன் நன்றாக செட் ஆவார்!) , ஆன்மீக பாகம் தவிர்த்து இது ஒரு செம மசாலா மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்.

தெளிவான ஆன்மீக விளக்கங்களும், வரலாற்று குறிப்புகளும் தனி ஆவர்த்தனம் செய்யாமல்  கதையோடு பயணிக்கின்றன. ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் வட இந்திய பெயர்களுடன் வலம் வந்தாலும் ஒவ்வொன்றுக்கும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவம் கொடுத்து நினைவில் நிற்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது கதைசொல்லியின் கைவண்ணம்!  

கதையின் பல இடங்களில் வரும் டாக்டர், வார் மஷீன்ஸ், டெரரிஸ்ட்  அட்டாக், ஹை ப்ரொபைல் டார்கெட், பாக்டரி  போன்ற வார்த்தைகள் இந்த கதை எந்த கால கட்டத்தில் நடக்கிறது என்ற குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. சோமரசத்தை உண்டவர்கள் இளமை மாறாமல் பல நூறு ஆண்டுகள் வாழ்வதும், சோமரசம் தயாரிக்க சரஸ்வதி நதிநீரைத் தவிர வேறு எதையும் பயன்படுத்த முடியாது என்பதும், சோமரசத்தை  ஒரு தனி மலையிலே எக்கக்சக்க பாதுக்காப்புடன் தயாரிப்பதும்...கதாசிரியரின் அதீத கற்பனை என்பதா அல்லது கற்பனை வறட்சி என்பதா புரியவில்லை. 

ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.முதல் புத்தகத்தை வாங்கும் போதே அடுத்த இரண்டு பாகங்களையும் சேர்த்து வாங்குவது நல்லது. முதல் பாகம் படித்து முடித்தவுடன் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்க பரபரக்கிறது மனது. 

1 comment:

Anonymous said...

மற்ற பாகங்கள் எங்கு கிடைக்கும்?